வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது


வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 Aug 2021 3:10 PM IST (Updated: 9 Aug 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.

கலந்தாலோசனை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக, மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம, ஊராட்சி வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்தான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

1292 வாக்குச்சாவடிகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1292 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கால அட்டவணையின்படி வாக்குச்சாவடிகள் இறுதிபட்டியல் வருகிற 11-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளை மண்டலம் வாரியாக பிரித்தல், பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணும் மையங்கள் அமைத்தல் போன்ற தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராகுல் நாத் தலைமையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது தொடர்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், மரகதம் குமரவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Next Story