3 பேர் கோர்ட்டில் சரண்


3 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 11 Aug 2021 1:47 AM IST (Updated: 11 Aug 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

கேபிள் டி.வி. நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலூர்,ஆக.
மேலூர் அருகே உள்ள கீழபதினெட்டாங்குடியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் மேலூரில் தனியார் கேபிள் டி.வி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தின் முன்பாக கடந்த 7-ந்தேதி கார் ஒன்று நிறுத்தப்பட்டது. கடைக்கு அருகில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் காரை ஓரமாக நிறுத்துங்கள் என ராஜா கூறியுள்ளார். அப்போது காரில் வந்தவருக்கும், ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் வந்தவர் செல்போனில் யாரிடமோ பேசினார். சிறிது நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் கம்பு மற்றும் கம்பியால் ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த நேரத்தில் ராஜாவுடன் வேலை பார்த்த சக ஊழியர் அப்பாஸ் (45) தடுக்க முயற்சித்தபோது அவரும் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜா மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையை சேர்ந்த அருண் பாண்டியன் (19) மற்றும் மணிகண்ட பிரபு (29) ஆகியோர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் நாகப்பன்பட்டி ரகுநாத் (32), வெள்ளாலப்பட்டி விக்னேஷ் (25), உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story