டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: கைதான இன்ஸ்பெக்டரின் கூட்டாளிகளிடம் இருந்து ரூ.2¼ லட்சம் மீட்பு

இளையான்குடி டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதான இன்ஸ்பெக்டரின் கூட்டாளிகளிடம் இருந்து ரூ.2¼ லட்சம் மீட்கப்பட்டது. தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை,
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்சத் (வயது33). டெய்லரான இவர், தனியாக தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் வைத்திருந்தார். இந்த நிலையில் கூடுதலாக பணம் தேவைப்பட்ட நிலையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த நபர்கள் இவருக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுப்பதாக கூறினர். இதனை நம்பிய அவர் கடந்த மாதம் 5-ந்தேதி நாகமலை புதுக்கோட்டை பகுதியில் அந்த நபர்களுக்காக காத்திருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தை அங்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, பாண்டியராஜா, அவரது நண்பர்கள் பால்பாண்டி, உக்கிரபாண்டி, கார்த்திக் ஆகியோர் பறித்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அர்சத் புகார் அளித்தார். இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீது பண பறிப்பு உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின்னர் வசந்தி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கலும் செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேனியை சேர்ந்த பால்பாண்டி (42), சிலைமான் பகுதியை சேர்ந்த உக்கிரபாண்டி (62), விருதுநகர் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற சீமைச்சாமி (51) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பால்பாண்டியிடம் இருந்து ரூ.61 ஆயிரம், உக்கிரபாண்டியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், சீமைச்சாமியிடம் ரூ.45 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






