ஆன்லைன் திருமணம் தகவல் நிலையம் மூலம் அறிமுகமாகி பெண்களை ஏமாற்றி உல்லாசம்; பல லட்சம் நகை, பணம் மோசடி


ஆன்லைன் திருமணம் தகவல் நிலையம் மூலம் அறிமுகமாகி பெண்களை ஏமாற்றி உல்லாசம்; பல லட்சம் நகை, பணம் மோசடி
x
தினத்தந்தி 15 Aug 2021 11:28 AM IST (Updated: 15 Aug 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் திருமணம் தகவல் நிலையம் மூலம் அறிமுகமாகி பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து விட்டு பல லட்சம் நகை, பணம் மோசடி செய்த மத்திய அதிகாரி மகன் பிடிபட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கானத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கானத்தூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், திருமணத்திற்காக தான் இணையதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், தனக்கு பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான சூர்யா (25) என்பவர் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் பார்த்து சென்றார்.

பின்னர் செல்போனில் பேசி உறவை வளர்த்து கொண்ட அவர், விடுதியில் அறை எடுத்து தன்னுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவும் செய்து கொண்டதாகவும், பின்னர் நிலம் வாங்கி தருவதாக கூறி காரில் கூட்டிச்சென்று ரூ.7 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுப்பற்றி கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலு, பாலகுமார் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழன்பன், சதீஷ்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

பெண்களிடம் உல்லாசம்

இந்த தனிப்படையினர் சூர்யாவை தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து கோவையில் இளம்பெண்ணுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். கோவைக்கு சென்று சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சூர்யா 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆன்லைன் திருமணம் தகவல் நிலையம் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகையை பறிப்பதை வழக்கமாக வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.

கைது

இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாக இதுபோல் பெண்களிடம் பல லட்ச பணமும் 100 பவுனுக்கு மேல் நகைகளையும் மோசடி செய்தது தெரியவந்தது.சூர்யாவின் தந்தை ஆந்திராவில் மத்திய உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கானத்தூர் போலீசார், ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கார் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story