200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலையை திருடி ஏரியில் புதைத்த 3 பேர் கைது


200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலையை திருடி ஏரியில் புதைத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 12:20 PM IST (Updated: 15 Aug 2021 12:20 PM IST)
t-max-icont-min-icon

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலையை திருடி ஏரியில் புதைத்து வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகாமையில் உள்ள இளந்தோப்பு பகுதியில் பழமைவாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 அடி உயரமுள்ள பஞ்சலோக சிலை திருடப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான தனிப்படையினர் அந்த சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு இளந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சதீஷ்குமார் (வயது 29) பழமையான சிலை ஒன்றை விற்பனைக்கு பேரம் பேசுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

3 பேர் கைது

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சதீஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மல்ரோசாபுரம் பகுதியில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏரியில் புதைக்கப்பட்டிருந்த பஞ்சலோக விநாயகர் சிலையை போலீசார் மீட்டனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த மே மாதம் செங்கல்பட்டு இளந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சதீஷ்குமார், செங்கல்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த விக்கி என்ற விக்ரம் (வயது 27) மறைமலை நகர் மல்ரோசாபுரத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (41) ஆகியோர் இளந்தோப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பஞ்சலோக விநாயகர் சிலையை திருடி சென்று மல்ரோசாபுரம் ஏரியில் புதைத்து வைத்தது தெரியவந்தது. பின்னர் அந்த சிலையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிலையை மீட்டனர்.

மேலும் சிலை கடத்தல் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story