ரூ.56½ லட்சம் நலத்திட்ட உதவிகள்


ரூ.56½ லட்சம் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 16 Aug 2021 3:03 AM IST (Updated: 16 Aug 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நடந்த சுதந்திர தினவிழாவில் ரூ.56½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்.

மதுரை,

மதுரையில் நடந்த சுதந்திர தினவிழாவில் ரூ.56½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்.

போலீஸ் அணிவகுப்பு

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கலெக்டர் அனிஷ்சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்படி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் பராமரிப்பு மானியம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 870 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், வருவாய்த்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 50 ஆயிரமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரமும், நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தெளிப்பான் எந்திரம் 1 பயனாளிக்கு ரூ.26 ஆயிரமும், குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சமும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் நிவாரணம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், 30 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் உள்பட மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 592 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் 215 பேருக்கும், காவல்துறையைச் சேர்ந்த 35 பேருக்கும் கலெக்டர் கேடயங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தியாகிகளுக்கு மாலை

சுதந்திர தினவிழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளுக்கு பாராட்டு விழா நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக கலெக்டர் அனிஷ் சேகர், காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட அலுவலர்) அபிதா ஹனிப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிர்தோஸ் பாத்திமா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியை தொடர்ந்து கலெக்டர், தியாகிகள் பாலு என்ற சுந்தர மகாலிங்கம், சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகிய 3 பேரின் இல்லங்களுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Next Story