அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்: தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 100-வது நாளில் புரட்சிகர வரலாற்று சாதனை


அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்: தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 100-வது நாளில் புரட்சிகர வரலாற்று சாதனை
x
தினத்தந்தி 16 Aug 2021 9:32 AM IST (Updated: 16 Aug 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்: தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 100-வது நாளில் புரட்சிகர வரலாற்று சாதனை திருமாவளவன் பாராட்டு.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத பல்வேறு சாதிகளை சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பெரியாரின் கனவு மெய்ப்பட்டு இன்று அவரது நெஞ்சில் தைத்த முள் முதல்-அமைச்சரால் களையப்பட்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற 100-வது நாளில் இந்த வரலாற்றுச் சாதனையை செய்த முதல்-அமைச்சரையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் அரசியலமைப்பு சட்ட உறுப்பு 14-ஐ குறிப்பிட்டு, அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருப்பதால், ஆகம விதிகளுக்கு உள்பட்ட கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே அர்ச்சகர்களாக நியமித்தால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். எனவே, ஆகம கோவில்களிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்றவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story