மனைவி, மகள்கள் கண் எதிரே ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி


மனைவி, மகள்கள் கண் எதிரே ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 17 Aug 2021 12:31 PM IST (Updated: 17 Aug 2021 12:31 PM IST)
t-max-icont-min-icon

மனைவி, மகள்களுடன் கடலில் குளித்தபோது, அவர்களின் கண் எதிரேயே ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர், தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு ஷர்மிளா (13), சாதனா (9) என 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று மல்லிகாபுரத்தில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதற்காக குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற ரமேஷ், பின்னர் அருகில் உள்ள திருச்சினாங்குப்பம் கடலில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து குளித்தார்.

ராட்சத அலையில் சிக்கி பலி

அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலை மனைவி மற்றும் மகள்களின் கண் எதிரேயே ரமேசை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதனர். ரமேசை காப்பாற்றும்படி அவர்கள் கூச்சலிட்டனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக படகில் கடலுக்குள் சென்று ரமேசை தேடினர். சிறிது நேரத்தில் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

செங்குன்றத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (18). இவர், தனது நண்பர்களான விஜய், ராகவேந்திரன், மணிகண்டன், அரவிந்தன் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் குளித்தார்.

அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலை வெங்கடேசை கடலுக்குள் இழுத்துச்சென்றது, உடனே மீனவர்கள் படகில் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை.

சம்பவம் குறித்து அறிந்த எண்ணூர் போலீசார், ராட்சத அலையில் சிக்கி மாயமான வாலிபரை மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Next Story