டெல்டா வகை கொரோனாவை கண்டறிய சென்னையில் நவீன ஆய்வகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


டெல்டா வகை கொரோனாவை கண்டறிய சென்னையில் நவீன ஆய்வகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 19 Aug 2021 11:31 AM IST (Updated: 19 Aug 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா வகை கொரோனாவை கண்டறிய சென்னையில் நவீன ஆய்வகம் இன்னும் 2 வாரங்களில் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

‘பேட்டரி கார்’
சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பயன்பெறும் ‘பேட்டரி கார்’ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரி இயக்குனர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நவீன ஆய்வகம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 361 பேர் பயனடைந்துள்ளனர். ‘கோவேக்சின்’ முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28-வது நாளில், 2-ம் தவணை போட வேண்டும். கோவேக்சின் 2-ம் தவணை தடுப்பூசி 4 லட்சம் பேருக்கு போட வேண்டியுள்ளது. இந்த தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி வரும் என காத்திருக்கிறோம். ‘கோவேக்சின்’ தடுப்பூசி வந்தவுடன் 2-ம் தவணைக்கு காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும்.

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி 2-ம் தவணை காலஅவகாசம் 84 நாட்களாக உள்ளது. டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டறியும் நவீன ஆய்வகம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்னும் 2 வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1.80 கோடி மதிப்பில்லான எந்திரம் உள்ளிட்ட ரூ.3 கோடியிலான பகுப்பாய்வு கூடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆய்வகத்தில் பணியாற்றக்கூடிய 5 டெக்னீசியன்கள் பெங்களூரு ஆய்வகத்தில் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர்.

27 லட்சம் தடுப்பூசிகள்
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தில் தேவையானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 1.2 என்ற விகிதத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும், தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 1½ லட்சம் பேருக்கு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரத்து 337 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்துக்கு இன்னும் 27 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டியுள்ளது. செவிலியர்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர், அவர்களின் பணி நிரந்தரம் குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story