‘மெட்ராஸ்’ தின கொண்டாட்டம்: பொதுமக்களுக்காக 3 நாட்கள் பல்வேறு போட்டிகள்; மாநகராட்சி அறிவிப்பு


‘மெட்ராஸ்’ தின கொண்டாட்டம்: பொதுமக்களுக்காக 3 நாட்கள் பல்வேறு போட்டிகள்; மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 3:03 PM IST (Updated: 19 Aug 2021 3:03 PM IST)
t-max-icont-min-icon

‘மெட்ராஸ்’ தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு 3 நாட்கள் பல்வேறு போட்டிகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

‘மெட்ராஸ்’ தினம்
சுதந்திர இந்தியாவுக்கும் முன்னர் மதராசப்பட்டினம் என்ற கிராமத்தை கடந்த 1639-ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு முன்னேற்றங்கள் பெற்று இந்த கிராமம் தற்போது சென்னை மாநகரமாக திகழ்கிறது. ‘மெட்ராஸ்’ என்று ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாநகரம் அழைக்கப்பட்டது. இந்த மாநகரத்தின் வளர்ச்சியை கொண்டாடும் விதமாக ‘மெட்ராஸ்’ தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் ‘மெட்ராஸ்’ தினத்தை கொண்டாடும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு தூய்மைப் பணி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகள்
அதன்படி சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மரக்கன்று நடுதல், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்தல், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் https://forms.gle/8KYXEhgjuTK70pfR7என்ற இணைப்பில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

சிங்கார சென்னை குறித்த ஓவிய போட்டி மற்றும் புகைப்படபோட்டி வரும் 20 மற்றும் 21-ந்தேதியும், மாநகராட்சி கட்டிட சுவர்கள், பாலங்களின் கீழுள்ள இடங்களில் மற்றும் இதர இடங்களில் திட்ட வரைப்பட போட்டி வரும் 22-ந்தேதியும் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் படைப்புக்களை https://chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jspஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மேலும் சென்னை மாநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து வரும் 22-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் ரிப்பன் மாளிகையில் உள்ள சீர்மிகு நகர திட்ட அலுவலகத்தில் வழங்கலாம்.

‘டுவிட்டர்’ பதிவு
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுவர்களில் வரையப்படும் வண்ண ஓவியங்களை ‘செல்பி’ எடுத்து 9445190856 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிரப்படும்.மேலும் சென்னையில் உள்ள பூங்காக்கள், நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twitter@chennaicorp என்ற ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிரலாம்.

மேற்கண்ட தகவல் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story