கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு; 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது


கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு;  5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 20 Aug 2021 4:52 PM GMT (Updated: 20 Aug 2021 4:52 PM GMT)

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்தது. இதனால் 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 100 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியது.

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்தது. இதனால் 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 100 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியது.
கரைகளை பலப்படுத்தும் பணி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 124 மைல் நீளமுள்ள இந்த வாய்க்கால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு மண்கரைகள் வலுவிழந்தது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் பலவீனமான மண்கரைகளை கண்டறிந்து அதன் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 15-ந் தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
வாய்க்கால் கரை உடைப்பு
கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட இந்த தண்ணீர் பெருந்துறை பகுதிக்கு இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. 8.5 அடி உயரம் வரை தண்ணீர் வரும் வாய்க்காலில், தற்போது 4 அடி உயரத்துக்கே தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
 இந்த நிலையில் பெருந்துறை அருகே உள்ள கண்ணவேலம்பாளையம் கிராமத்தின் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையில் நேற்று முன்தினம் மாலை கசிவு ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று, அதனை சீர் செய்யும் பணியில்  ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை இந்த பணி நடந்தது. அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
வெள்ளம்போல்..
இந்த நிலையில் நேற்று அதிகாலை கரையில் ஏற்பட்ட சிறு துளை பெரிய துளையாக மாறியது. இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதி வாய்க்கால் கரையில் சுமார் 50 அடி அகலத்தில் உடைப்பு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல, வாய்க்காலில் வரும் தண்ணீர் உடைந்த கரையின் வழியாக வெளியேறிக்கொண்டிருந்தது. இதனால் தண்ணீர் ஆற்றுவெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
பயிர்கள் மூழ்கின
கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதில் மலைப்பாளையம், கரையக்காடு, கண்ணவேலம்பாளையம், நெல்வயல், வரவங்காடு ஆகிய 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின.
இதையடுத்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தினர். சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம், கவுந்தப்பாடி அருகே உள்ள நல்லாம்பட்டி, சந்திராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கசிவு நீர் பள்ளங்களிலும், கீழ்பவானி கிளை வாய்க்கால்களிலும் தண்ணீரை திறந்து விட்டனர்.
இதனால் கீழ்பவானி பெரிய வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறையத்தொடங்கியது. 
விவசாயிகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கசிவு நீர் செல்வதற்காக, வாய்க்கால் கரையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் பக்கவாட்டில் கான்கிரீட் சுவர் எழுப்பி கரையோரத்தை பலப்படுத்திய அதிகாரிகள், கசிவு நீர் செல்லும் வாய்க்காலின் தரைப் பகுதியில் கான்கிரீட் தளத்தை பலமாக போடத் தவறி விட்டனர்.
அதனால் தான், கான்கிரீட் தளமில்லாத வாய்க்காலின் தரைப்பகுதியில் ஒரு சிறு துளை ஏற்பட்டு, அது கரையையே உடைக்கும் அளவிற்கு பெரிதாகி விட்டது. இந்த உடைப்பை எப்போது சரி செய்வார்கள்?என்பது, தெரியவில்லை. வாய்க்காலில் தண்ணீர் வந்ததும், நெல் நாற்று நடவு மற்றும் இதர வேளாண்மை பணிகளை செய்யலாம் என்று, நினைத்துக்கொண்டிருந்தோம். தற்போது இந்த போகத்தை எப்படி அறுவடை செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகி விட்டது’ என்றனர்.

Next Story