திறந்தவெளி மதுபாராக மாறும் ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம்


திறந்தவெளி மதுபாராக மாறும் ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:44 PM IST (Updated: 20 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம் திறந்தவெளி மதுபாராக மாறி வருகிறது.

ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம் திறந்தவெளி மதுபாராக மாறி வருகிறது.
பஸ்நிலையம்
ஈரோடு மாநகரை ஒட்டி உள்ள 46 புதூர் ஊராட்சி ஆனைக்கல்பாளையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற பஸ்நிலையம் கட்டப்பட்டது. சுமார் ரூ.1½ கோடி செலவில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் காணொலி காட்சி மூலம் இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டது.
திறப்பு விழா நடந்த நாளில் மட்டும் அந்த பகுதியையொட்டிய வெள்ளாளபாளையம் கிராமத்துக்கு வரும் ஒரு டவுன் பஸ் இந்த பஸ் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அதன்பின்னர் பஸ் நிலையம் என்ற பெயர் பலகையை தாங்கி வெறுமனே இந்த பகுதி உள்ளது.
மதுபார்
எள் அறுவடை, சோளம் அறுவடை காலங்களில் இந்த பகுதி விவசாயிகள் தானியங்கள் உலர்த்தும் களமாக பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். புதிதாக 2 சக்கர வாகனங்கள், கார்கள் ஓட்டி பழகுபவர்களும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் சமீப காலமாக ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம் திறந்தவெளி மதுபாராக மாறி இருக்கிறது. இங்கு வரும் குடிமகன்கள் வசதியாக உட்கார்ந்து மதுவை குடித்து விட்டு, மதுபாட்டில்களை அங்ேகயே வீசி செல்கிறார்கள். இந்த பஸ் நிலையம் அமைந்திருக்கும் பகுதியையொட்டி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகம் உள்ளது. தினசரி போலீஸ் அதிகாரிகள், நூற்றுக்கணக்கான போலீசார் வந்து சென்றாலும், பஸ் நிலையத்தை மதுபான பாராக மாற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோரிக்கை
ஈரோடு மாநகரையொட்டி சுற்றுவட்டச்சாலை பகுதியில் வசதியாக இந்த பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலையத்தை ஆம்னிபஸ்கள் நிறுத்தும் பகுதியாக மாற்றினால் இரவு நேரத்தில் சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆம்னி பஸ்கள் இந்த பஸ் நிலையத்துக்கு மாற்றுவதன் மூலம் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம் பகுதி வளர்ச்சி அடையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே மதுபாராக மாறும் பஸ் நிலையத்தை மீட்கவும், மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பஸ்நிலையம் பயனின்றி கிடப்பதை தடுக்கவும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story