ஈரோட்டில் கேரள மக்களின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


ஈரோட்டில் கேரள மக்களின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2021 8:10 PM IST (Updated: 21 Aug 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையையொட்டி ஈரோட்டில் கேரள மக்கள் நேற்று அத்தப்பூ கோலமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள்.

ஓணம் பண்டிகையையொட்டி ஈரோட்டில் கேரள மக்கள் நேற்று அத்தப்பூ கோலமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள்.
ஓணம் பண்டிகை
கேரள மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். இந்த நாளில் உலகம் எங்கும் வாழும் கேரள மக்கள் உற்சாகமாக ஓணம் விழாவை கொண்டாடி வருகிறார்கள். ஓணத்துக்கு முந்தைய 10 நாட்கள் ஓணம் கொண்டாட்டம் களை கட்டும். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகை சற்று களை இழந்தாலும், வழக்கம்போல அவரவர் வீடுகளில் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஈரோட்டில் வாழும் கேரள மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்டிகையை நேற்று கொண்டாடினார்கள். வீடுகளில் பூக்களால் கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
பாரம்பரிய உடை-உணவு
கருங்கல்பாளையம், செட்டிப்பாளையம், ரெயில்வே காலனி, சாஸ்திரி நகர், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை என மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து ஓணம் கொண்டாடினார்கள். பெண்கள் பாரம்பரிய வெண்பட்டு அணிந்தும், ஆண்கள் வேட்டி-ஜிப்பா அணிந்தும் விழாவை கொண்டாடினார்கள். கேரள பாரம்பரியப்படி உணவுகளும் பரிமாறப்பட்டன.
இதுபற்றி கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர் கூறும்போது, ‘ஓணம் பண்டிகை என்பது மகாபலி சக்ரவர்த்தியையும், விஷ்ணுவின் அவதாரமான வாமனரையும் வரவேற்கும் தினமாகும். இந்த தினத்தை முன்னிட்டு 10 நாட்கள் அத்தப்பூ கோலமிட்டு வீடுகளை தயார் செய்வோம். ஓண விருந்து, ஓண பாயாசம் என்று பாரம்பரிய முறையில் சமைத்து உறவினர்கள், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முடிந்து, வரும் காலங்களில் அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஓணம் சிறப்பு வழிபாடு செய்து உள்ளோம்’ என்றார்.
-----


Related Tags :
Next Story