கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்


கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை   சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Aug 2021 3:07 PM GMT (Updated: 21 Aug 2021 3:07 PM GMT)

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாய்க்கால் உடைப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கண்ணவேலாம்பாளையம் கிராமத்தின் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையில் கடந்த 19-ந் தேதி மாலை கசிவு ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அதே இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஆற்றுவெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறியது.
பயிர்கள் மூழ்கின
கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதில் மலைப்பாளையம், கரையக்காடு, கண்ணவேலாம்பாளையம், நெல்வயல், வரவங்காடு ஆகிய 5 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கீழ்பவானி பாசன பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின.
இதையடுத்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து உடைந்த கரையை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.  உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள்
இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் கூறும்போது, ‘கீழ்பவானி வாய்க்காலில் இப்படி ஒரு கரை உடைப்பு நடந்ததே இல்லை. கசிவு நீர் பாலம் அமைக்கிறோம், கரையின் பக்கவாட்டில் கான்கிரீட் சுவர் அமைக்கிறோம் என்று கூறிக்கொண்டு, மேற்படி பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் வாய்க்காலின் உட்புறத்தில், அதுவும் தரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டால், அதை தாக்குப்பிடிக்கக்கூடிய அளவிற்கு கனமான கான்கிரீட் மூலம் அஸ்திவாரத்தை போட்டு பலப்படுத்த தவறி விட்டார்கள்.
அதை முறைப்படி செய்யாமல், பெயரளவிற்கு கனமில்லாத கான்கிரீட்டை போட்டதால் தற்போது வாய்க்கால் கரை உடைந்துள்ளது. வாய்க்கால் உடைப்பால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. எனவே பயிர் சேதத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story