தொழிலாளி மர்மச்சாவு; 3 பேரிடம் போலீஸ் விசாரணை


தொழிலாளி மர்மச்சாவு; 3 பேரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2021 9:07 PM IST (Updated: 21 Aug 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தொழிலாளி
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரபீக். இவருடைய மகன் பர்மானுல்லா (வயது 27). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி பர்வீன்பானு தற்போது கர்ப்பமாக உள்ளார். பர்மானுல்லா அந்த பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் வாங்குவதற்கு காலி கேன் வேண்டும் என்று பர்மானுல்லாவிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த கும்பலுக்கும், பர்மானுல்லாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மர்மச்சாவு
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பர்மானுல்லாவை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர். இதில் பர்மானுல்லாவுக்கு கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பர்மானுல்லா திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பர்மானுல்லா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மர்மச்சாவு என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, பர்மானுல்லாவை தாக்கிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும், 3 பேர் தாக்கியது தான் பர்மானுல்லா இறப்பிற்கு காரணம் என்பது உறுதியானால் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, 3 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story