பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை அபேஸ்
கோபி அருகே வீடு புகுந்து பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோபி அருகே வீடு புகுந்து பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மர்மநபர்கள் 2 பேர்
கோபி அருகே உள்ள கொளப்பலூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணியன். அவருடைய மனைவி நாகம்மாள் (வயது 60). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பகல் 11 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு முன்பு ஒரு மோட்டார்சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து 2 பேர் இறங்கினர். அவர்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரை இருக்கும்.
அவர்கள் நைசாக மணியனின் வீட்டுக்குள் நுழைந்து நாகம்மாளிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவரிடம், ‘தாங்கள் நகைக்கு பாலீஷ் போட வந்திருக்கிறோம். எனவே நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அதை பாலீஷ் போட்டு தருகிறோம்’ என்றனர். அதை நம்பிய நாகம்மாள் தான் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.
தப்பித்து சென்றனர்
நகையை பெற்றுக்கொண்ட மர்மநபர்கள் அதை தாங்கள் கொண்டு வந்த ஒரு தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டுள்ளனர். பின்னர் நாகம்மாளிடம் அவர்கள், மஞ்சள் தூள் எடுத்து வரக்கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர் உள்ளே சென்று மஞ்சள் தூளை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார். அந்த மஞ்சள் தூளை மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டு கலக்கியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து நாகம்மாளிடம் ஒரு பாத்திரம் வாங்கி அதில் தண்ணீர் நிரப்பியுள்ளனர். பின்னர் ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்துக்கு தண்ணீரை மாற்றி மாற்றி ஊற்றியுள்ளனர். இதையடுத்து நாகம்மாளிடம் அவர்கள், நகை இந்த பாத்திரத்தில் உள்ளது. 10 நிமிடம் நகையை தீயில் சூடு செய்த பிறகு வெளியே எடுத்து பாருங்கள். நகை பாலீஷ் ஆகி பளபளப்பாக இருக்கும் எனக்கூறினார்கள். பின்னர் 2 பேரும் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ஏறி வேகமாக சென்று விட்டனர்.
நகை அபேஸ்
அவர்கள் கூறியபடி நாகம்மாள் தீயில் சூடு செய்து பாத்திரத்தை எடுத்து பார்த்தார். அப்போது பாத்திரத்தில் நகை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவர், மர்மநபர்கள் 2 பேரும் தன்னை ஏமாற்றி நகையை அபேஸ் செய்துவிட்டு சென்றதை உணர்ந்தார்.
இதுகுறித்து நாகம்மாள் சிறுவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நூதன முறையில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story