ஈரோடு பெரியவலசு பகுதியில் நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஈரோடு பெரியவலசு பகுதியில், நகை அடகு கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு
ஈரோடு பெரியவலசு பகுதியில், நகை அடகு கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நகை அடகு கடை
ஈரோடு மாணிக்கம்பாளையம் சுக்கிரமணிய வலசு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 33). இவர் ஈரோடு பெரியவலசு நால் ரோடு பகுதியில், ஸ்ரீ ஆஞ்சநேயா என்ற பெயரில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் அசோக்குமார் சென்னையில் வேறு தொழில் செய்து வருவதால், நகை அடகு கடையின் முழு நிர்வாகத்தையும், ஈரோடு கோட்டை அகில்மேடு வீதியை சேர்ந்த சரவணன் (36) என்பவர் மேலாளராக இருந்து கவனித்து வருகிறார்.
இந்த அடகு கடையில் பெரியவலசு, வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், இடையன்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், முனிசிபல் காலனி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 250 பவுன் நகை வரை அடமானம் வைத்து, பணம் பெற்றுள்ளனர்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில், பொதுமக்கள் தங்களுடைய நகைகளை மீட்கவும், வட்டி கட்டுவதற்கும் அடகு கடைக்கு வந்தபோது கடை பூட்டியே இருந்துள்ளது. கடந்த 8 மாதங்களாக கடை திறக்கப்படவில்லை எனத்தெரிகிறது. மேலும், நகை அடகு கடையின் உரிமையாளர் அசோக்குமார், மேலாளர் சரவணன், ஊழியர் அய்யப்பன் ஆகியோர் நகை அடகு வைத்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் போனை எடுக்காமல், சில நேரம் சுவிட்ச் ஆப் செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை நகை அடகு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அடகு கடை மேலாளர் சரவணனை வீட்டில் இருந்து, பெரியவலசுக்கு அழைத்து வந்து, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அலட்சியம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘அடகு வைத்த நகைக்கு உரிய பணம் தருகிறோம், எங்களுடைய நகையை திரும்பி தாருங்கள் என்று மேலாளர் சரவணனிடம் கேட்டால் அவர் அலட்சியமாக பதில் கூறுகிறார்.
எங்களுடைய நகை உள்ளதா?, இல்லை விற்று விட்டார்களா? என்று தெரியவில்லை. நாங்கள் அடகு வைத்துள்ள நகைகளை எங்களிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும்’ என்றனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து மேலாளர் சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் கூறும்போது, ‘பொதுமக்கள் வைத்த நகைகளுக்கு நாங்கள் கொடுத்த பணத்தை விட கூடுதல் பணத்திற்கு, தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளோம். அனைத்து நகைகளும் பத்திரமாக உள்ளது’ என்றார்.
இருப்பினும் சரவணன் அளித்த பதிலில் போலீசாருக்கு நம்பிக்கை இல்லாததால் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், ‘இதுகுறித்து புகார் கொடுங்கள். நகையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






