இன்று முதல் திரையிட அனுமதி: தியேட்டர்களில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
ஈரோட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சினிமா திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சினிமா திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறையத்தொடங்கியதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி மூடப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்படவில்லை.
தியேட்டர்களை திறக்க அனுமதி
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 50 தியேட்டர்கள் உள்ளன. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 11 தியேட்டர்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் நேற்று சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது ஒவ்வொரு இருக்கையாக சுத்தப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புது படங்கள்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, தமிழக அரசு சரியான நேரத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தியேட்டர்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதி செய்துள்ளோம். தியேட்டருக்கு வரும் மக்களுக்கு நுழைவு வாயிலேயே தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். நாளை (அதாவது இன்று) முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்து உள்ளது. எனினும் தமிழகம் முழுவதும் உள்ள திரைப்பட வினியோகஸ்தர்கள் மற்றும் தலைமை சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய பின்னர் தான் புதிய படங்கள் திரையிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story