உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது- தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு

உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை,
உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில், மேற்கு வங்காள மாநிலம், பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கில் தங்கி, பெருந்துறை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர்.
இவர்களுடன், வங்காள தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் முறையான அனுமதியின்றி தங்கி, வேலை செய்து வருவதாக பெருந்துறை போலீசாருக்கு கடந்த 19-ந்தேதி ரகசிய தகவல் கிடைத்தது.
2 தொழிலாளர்கள் பிடிபட்டனர்
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் பணிக்கம்பாளையத்தில் மேற்கு வங்க மாநில கட்டிடத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த 4 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது. இதில் 2 பேர் பிடிபட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் 2 பேர் தப்பித்து ஓடிவிட்டனர்.
உரிய ஆவணங்கள் இல்லை
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் முஜிம் மாண்டல் (வயது30), எபாஷல் (22) ஆகியோர் என்பதும், தப்பித்து ஓடியவர்கள் ஜஹாங்கீர், ஆகாஷ் என்பதும், இவர்கள் 4 பேரும் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்து, தொழிலாளிகளாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முஜிம் மாண்டலையும், எபாஷலையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு சபினா விசாரித்து 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பித்து ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
Related Tags :
Next Story