தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை சாவு


தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை சாவு
x
தினத்தந்தி 24 Aug 2021 3:04 AM IST (Updated: 24 Aug 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை இறந்து கிடந்தது.

தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை இறந்து கிடந்தது.
வனவிலங்குகள் அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, கடம்பூர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம், ஜீர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
யானை இறந்து கிடந்தது
இதனால் வனவிலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தோட்டத்து வேலியில் பேட்டரியால் மின்சாரம் பாய்ச்சுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை ஜீர்கள்ளி வனப்பகுதியையொட்டி ஜோராஒசூர் கிராமத்தில் உள்ள ஜேம்ஸ் என்பவர் தோட்டத்து மின்வேலியில் சிக்கி யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் வனச்சரகர் ராமலிங்கத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் வனத்துறையினருடன் அங்கு சென்று இறந்து கிடந்த யானையின் உடலை பார்வையிட்டார். இறந்த யானை மக்னா (ஆண் யானையும் அல்ல, பெண் யானையும் அல்ல) என்பதும், 30 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மின்வேலியில் சிக்கி...
வனப்பகுதியில் இருந்து உணவு தேடி அங்கு வந்த யானை தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த வேலியை தள்ளி உள்ளே நுழைய முயன்றுள்ளது. அப்போது வேலியில் பேட்டரிக்கு பதிலாக உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ச்சப்பட்டு் இருந்ததால் மின்சாரம் தாக்கி யானை சுருண்டு விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும் கால்நடை டாக்டர் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் குழி தோண்டி அதே இடத்தில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் தோட்டத்து விவசாயி ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story