கோபியில் துணிகரம்: கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்
கோபியில் கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொரோனா நிவாரண நிதி
ஈரோடு மாவட்டம் கோபி வேலுமணி நகரை சேர்ந்தவர் சுந்தரி (வயது 70). இவர் அந்த பகுதியில் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டு்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கள்ளிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு 40 வயது இருக்கும். அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சுந்தரியிடம் சென்று, உங்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.18 ஆயிரம் வந்துள்ளது. அதற்காக புகைப்படம் எடுக்க வேண்டும். மோட்டார்சைக்கிளில் ஏறுங்கள். வீட்டு்க்கு அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
நகையை கழற்றி வைத்தார்
உடனே சுந்தரியும் அந்த நபரின் மோட்டார்சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சுந்தரியிடம் அவர், கொரோனா நிவாரண நிதி கொடுக்க அதிகாரிகள் வருகிறார்கள். நகை அணிந்து இருந்தால் நிவாரண தொகை தர மாட்டார்கள். எனவே நகையை கழற்றி வைத்து விட்டு வாருங்கள். புகைப்படம் எடுக்க வேண்டும். அதிகாரிகள் வந்ததும் நிதி வாங்கி தருகிறேன் என்று கூறி உள்ளார்.
இதனை சுந்தரியும் உண்மை என்று நம்பினார். இதனால் தான் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கழற்றி வீட்டுக்குள் இருந்த கட்டிலின் மெத்தைக்கு அடியில் வைத்துள்ளார். இதை அந்த நபர் கவனித்து கொண்டிருந்துள்ளார்.
அபேஸ்
பின்னர் சுந்தரியிடம் அந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். உடனே அவர் தண்ணீரை கொடுத்துவிட்டு டீ போட்டு தருகிறேன் என்று கூறி உள்ளார். அதன்பின்னர் சுந்தரி டீ போடுவதற்காக சமையல் அறைக்குள் சென்றுள்ளார்.
டீ போட்டு கொண்டு வந்து பார்த்த போது அந்த நபரை காணவில்லை. இதனால் சுந்தரி தேடி பார்த்தார். அவர் அங்கிருந்து மாயமாகி இருப்பது தெரிய வந்தது. உடனே அவர் நகை இருந்த அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு நகையை காணவில்லை. அப்போது தான் அந்த நபர் நகையை திருடிவிட்டு் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சுந்தரி கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிவிட்டு் தப்பித்து சென்ற அந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story