தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது- கூடுதலாக 830 டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது. கூடுதலாக 830 டன் உரம் கொள்முதல் செய்ய வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஈரோடு
தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது. கூடுதலாக 830 டன் உரம் கொள்முதல் செய்ய வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
524 டன் யூரியா
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உள்பட 556 விற்பனை நிலையங்கள் மூலமாக உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே உர தேவை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து உரம் கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான யூரியா உரம் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 524 டன் யூரியா உரம் ஸ்பிக் நிறுவனம் மூலம் பெறப்பட்ட நிலையில், இந்த வார இறுதிக்குள் கூடுதலாக 250 டன் யூரியா எம்.சி.எப். நிறுவனத்திடம் இருந்தும், 580 டன் யூரியா ஜி.எஸ்.எப்.சி. நிறுவனத்திடம் இருந்தும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உரம் இருப்பு
விற்பனை நிலையங்களில் உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகள் கையெழுத்து பெற்று உரங்கள் வழங்க வேண்டும். அனைத்து விற்பனைகளையும் பி.ஓ.எஸ். விற்பனை முனைய எந்திரம் மூலம் மேற்கொள்ள வேண்டும். உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்து விற்க வேண்டும்.
இந்த விதிகளை மீறும் உர விற்பனை நிலையம் மீது உரக்கட்டுப்பாடு ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க அனைத்து வட்டாரத்திலும் வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் 1,774 டன் யூரியா, 2 ஆயிரத்து 418 டன் டி.ஏ.பி. உரம், 2 ஆயிரத்து 880 டன் பொட்டாஷ், 7 ஆயிரத்து 652 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு உள்ளது. விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும். உர மூட்டையில் அச்சிடப்பட்ட விலையை பார்த்து உரிய ரசீது பெற்று விவசாயிகள் உரங்களை வாங்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு இணை இயக்குனர் சின்னசாமி கூறினார்.
Related Tags :
Next Story