குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்- பவானிசாகர் அருகே பரபரப்பு


குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்- பவானிசாகர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 25 Aug 2021 3:14 AM IST (Updated: 25 Aug 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட நால்ரோடு அண்ணாநகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இங்குள்ளவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடியிருப்பு பகுதி விரிவடைந்து வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல முறை வலியுறுத்தி வந்தனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
சாலை மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் காலிக்குடங்களுடன் பவானிசாகர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் நால்ரோடு அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். 
பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story