தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை கவ்விச்சென்ற சிறுத்தை
தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை சிறுத்தை கவ்விச்சென்றது.
தாளவாடி
தாளவாடி வனச்சரகத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அங்குள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
இதுவரை 15-க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 20 நாய்களையும் வேட்டையாடி உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்கிறது.
சூசைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57) இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதற்காக காவலுக்கு 2 நாய்களையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தார்கள். அப்போது காவலுக்கு இருந்த நாயை சிறுத்தை கவ்வியபடி வனப்பகுதிக்குள் செல்வது தெரிந்தது.
இதுபற்றி பழனிச்சாமி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனச்சரகர் சதீஷ் வனத்துறையினருடன் இணைந்து, அங்கு பதிவாகியிருந்த சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story