ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வீட்டு மனை-வீடுகள் வாங்கியவர்களுக்கு பத்திரம் வழங்கும் முகாம்; ஏராளமானவர்கள் பங்கேற்பு
ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்கியவர்களுக்கு பத்திரங்கள் வழங்கும் முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றார்கள்.
ஈரோடு
ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்கியவர்களுக்கு பத்திரங்கள் வழங்கும் முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றார்கள்.
வீடு-வீட்டுமனைகள்
தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்த வீட்டு மனை, வீடுகளுக்கான பத்திரங்கள் வழங்க 3 நாட்கள் முகாம் நடைபெறும் என்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்தார். அதன்படி ஈரோடு சம்பத்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில் வீட்டு வசதி வாரியத்தில் இருந்து வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி, உரிய பணம் செலுத்தியும் பத்திரங்கள் பெற முடியாமல் தவித்த பலரும் வந்து தங்கள் விண்ணப்பங்களை அளித்தனர்.
இந்த முகாம் நடைபெறுவது தொடர்பாக ஈரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய மனைகள் அமைந்து உள்ள சில இடங்களில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஈரோடு வீட்டு வசதி பிரிவு சம்பத் நகர் அலுவலகத்தில் விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. முழுத்தொகை செலுத்தியவர்கள், நிலுவை தொகையை முழுமையாக செலுத்துபவர்கள், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து வரைவு கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
முகாம்
அதன்பேரில் 2-வது நாளாக நேற்று முகாம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு வீட்டு வசதி பிரிவை பொறுத்தவரை ஈரோட்டில் முத்தம்பாளையம் பகுதியிலும், பெருந்துறை பகுதியிலும் வீட்டு மனைகள், வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (முன்பு ஈரோடு மாவட்டம்) பகுதியிலும் வீட்டு வசதி வாரிய வீடுகள் ஈரோடு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்கு வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் வாங்கியவர்கள் பத்திரங்கள் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்ததாக புகார்கள் வந்தன. ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக கிரைய பத்திரம் வாங்க முடியாத நிலை இருந்தது. மேலும், நில அளவையர், வருவாய் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களில் போதிய ஆட்கள் இல்லாமல் இருப்பதால் வீட்டு மனைகள், வீடுகள் வாங்கியவர்கள் தினசரி அலுவலகத்துக்கு வந்து செல்லும் அவலம் உள்ளது.
அலைக்கழிப்பு
இதுபற்றி நேற்று பத்திரம் வாங்க வந்த பயனாளி ஒருவர் கூறியதாவது:-
வீட்டு வசதி வாரியம் வீடுகள், வீட்டு மனைகள் வாங்க விரும்பும் நடுத்தர வசதி உள்ள மக்களுக்கு அரசு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், ஈரோட்டில் வீட்டுமனைகள் கிடைத்தவர்கள் ஏன் ஒதுக்கீடு பெற்றோம் என்று நினைக்கும் அளவுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள். இங்கு பணியில் இருக்கும் சிலர் நேரடியாக வரும் பொதுமக்களுக்கு உரிய பதில் கூறாமல், இடைத்தரகர்கள் மூலம் வருபவர்களின் பணிகளை மட்டுமே முடித்துக்கொடுக்கிறார்கள். பணம் செலுத்தியதற்கான ரசீது வாங்கவே பல மாதங்கள் அலைக்கழிக்கிறார்கள். செயற்பொறியாளர் மற்றும் ஒரு சில பணியாளர்கள் தவிர மற்றவர்கள் பொதுமக்களுக்கு உரிய மரியாதை கூட அளிப்பதில்லை. அதாவது சந்தேகங்கள் கேட்க வரும் பொதுமக்களுக்கு உரிய பதில் கூறுவது இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பே பணம் செலுத்தியவர்கள் கூட, தங்கள் வீடு, வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புக்கான பத்திரங்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. பத்திரம் கேட்டு வருபவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் யாரும் கூறுவது இல்லை. கேட்டால் எங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையில் வேலை செய்கிறோம். நீங்கள் ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று கூறுகிறார்கள். சிலர் ஆண்டுக்கணக்கில் வாரம் தோறும் வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்கு வந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பத்திரம் கிடைக்கவில்லை. பத்திரம் கிடைப்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டாலும், ஈரோட்டில் பத்திரத்தில் கையொப்பம் இடும் தகுதிபெற்ற அதிகாரி நியமிக்கப்படாததால், அனைத்து பத்திரங்களும் உடனடியாக வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
22 பேருக்கு பத்திரம்
இந்தநிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் முத்துசாமி இந்த முகாம் அறிவித்து உள்ளார். இதில் செயற்பொறியாளர் பத்திரங்களில் கையொப்பம் இடலாம் என்று உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. எனவே ஈரோடு செயற்பொறியாளர் பெரியசாமி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக பத்திரங்கள் வழங்கி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு ஈரோடு செயற்பொறியாளர் பெரியசாமி பத்திரங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல மேற்பார்வை பொறியாளர் கே.டி.சாந்தி கலந்து கொண்டு பொதுமக்கள் சிலருக்கு பத்திரங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ராமநாதன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3-ம் நாள் முகாம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. வீடு, வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முழு தொகையும் செலுத்தியவர்கள் உரிய ஆவணங்களை வழங்கி பத்திரங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story