மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
ஈரோடு
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
மின் வாரியத்தில் வேலை
அந்தியூர் நேரு வீதியை சேர்ந்த மாரசாமி (வயது 35) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். எங்களது குடும்ப நண்பரான அந்தியூர் தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகளுக்கு அரசு வேலைக்கு பணம் செலுத்தி உள்ளதாகவும், என்னையும் பணம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதற்காக அவர், மின் வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றும் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த லைன்மேன் என்னிடம் மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
ரூ.21 லட்சம் மோசடி
இதை நம்பிய நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.16 லட்சத்தை அந்த லைன்மேனிடம் கொடுத்தேன். வேலை உறுதி செய்யப்பட்டதை போல அவர்கள் 2 பேரும் சேர்ந்து தபால் மூலம் பல முறை போலியான ஆர்டர்களை அனுப்பி வைத்தனர். ஆனால், பணி ஆணை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பலரிடம் கேட்டபோது, அந்த லைன்மேன் என்னைப்போல 40-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும், மின்வாரியத்தில் வேலை கிடைக்காது, பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை அவர்கள் பணத்தை தரவில்லை. எனவே அவர்கள் 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அந்தியூர் வே.வெள்ளாபாளையம் ஓசைபட்டி பாட்டப்பன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கவேல் (60) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்திருந்த மனுவில், ‘என்னுடைய மகனுக்கு மின் வாரிய தொழில் நுட்ப உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு, மின் வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வரும் ஒருவர் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
Related Tags :
Next Story