தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு


தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 28 Aug 2021 3:00 AM IST (Updated: 28 Aug 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
நெல் சாகுபடி
ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய பாசனநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து 2021-2022-ம் ஆண்டு நெல் சாகுபடிக்காக, தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய்களில் ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. சாகுபடியின்போது உயர் விளைச்சல் ரகங்கள், சான்று பெற்ற விதைகள், எந்திர நடவு, பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் பூச்சிநோய் கட்டுப்பாடு முறைகள் ஆகிய தொழில் நுட்பங்களை வேளாண்மைத்துறையின் ஆலோசனைப்படி விவசாயிகள் சிறந்த முறையில் கடைபிடித்துள்ளனர்.
தற்போது நெற்பயிர் முதிர்ச்சி நிலையை அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லினை விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய ஏதுவாக இன்று (சனிக்கிழமை) முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 31 இடங்களில் திறக்கப்பட உள்ளன.
கொள்முதல் நிலையம்
அதன்படி இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை ஏளூர், புதுவள்ளியாம்பாளையம் கரட்டடிபாளையம், நஞ்சைபுளியம்பட்டி, கள்ளிப்பட்டி, காசிபாளையம், தூக்கநாயக்கன்பாளையம், மேவானி, சவண்டப்பூர், கருங்கரடு, பி.மேட்டுப்பாளையம், பொன்னாச்சிபுதூர், பொலவக்காளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
இந்த மையங்களில் ‘ஏ’ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,958-க்கும், சாதாரண ரக நெல் குவிண்டால் ரூ.1,918-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லினை விற்பனை செய்ய, கிராம நிர்வாக அலுவலர் சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், விவசாயியின் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story