பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 28 Aug 2021 8:18 PM IST (Updated: 28 Aug 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

பவானி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

பவானி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
காதல் ஜோடி
பவானி ஜம்பை மசூதி வீதி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. அவருடைய மகன் கண்ணன் (வயது 22). கட்டிடதொழிலாளி.. அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரின் மகள் மோகனப்பிரியா (19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கண்ணனும், மோகனப்பிரியாவும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன், மோகனப்பிரியா காதல் விவகாரம் 2 பேரது பெற்றோருக்கும் தெரியவந்தது. இவர்களின் காதலுக்கு மோகனப்பிரியாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
இதனால் அவருக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதனால் மோகனப்பிரியாவும், கண்ணனும் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் பவானி கூடுதுறை அருகே உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பேரும் தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியவதி 2 பேரது பெற்றோர்களையும் போலீஸ் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 2 பேரது பெற்றோர்களும் அவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து குருசாமி வீட்டுக்கு கண்ணனும், மோகனப்பிரியாவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story