ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்


ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 28 Aug 2021 3:02 PM GMT (Updated: 28 Aug 2021 3:02 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் தற்போது பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. எனினும் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்காத வகையில், அரசு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது. அதன்படி வருகிற 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடங்களில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கூட வளாகம், வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. மேலும் வகுப்பறைகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்தல், மாணவர்கள் இருக்கையில் சமூக இடைவெளி உள்ளதா போன்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், நகர் நல அலுவலர் முரளி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 
சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி முகாம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
வருகிற 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து முன்ஏற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. வகுப்பறையை தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயிலில் கிருமிநாசினி சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமான ஒன்று. ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர். மீதமுள்ள 30 சதவீத ஆசிரியர்களுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ஒரு மையம் வீதம் ஆசிரியர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது.
சுழற்சி முறையில்...
தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஈரோட்டில் நேற்று முன்தினம் கல்வித்துறை இயக்கத்தின் இணை இயக்குனர் குமார் தலைமையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தினந்தோறும் பாடங்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அதிகம் உள்ள வகுப்புகளில் சுழற்சி முறையில் பாடங்கள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story