ஆசனூர் அருகே வாகனங்களை வழி மறித்த யானைகள்
ஆசனூர் அருகே வாகனங்களை யானைகள் வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆசனூர் அருகே வாகனங்களை யானைகள் வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்த வனப்பகுதி வழியாகத்தான் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எப்போதும் இந்த சாலையில் கார், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.
அவ்வாறு வரும் கரும்பு லாரி டிரைவர்கள், யானைகள் தின்பதற்காக கரும்பு கட்டுகளை தூக்கி ரோட்டு ஓரத்தில் போட்டு செல்வார்கள். கரும்புகளை தொடர்ந்து ருசி பார்த்த யானைகள் தற்போது நாள் தோறும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து ரோட்டு ஓரம் வந்து நின்றுவிடுகின்றன.
ரோட்டு ஓரத்தில் உலா
நெடுஞ்சாலையில் வரும் கரும்பு லாரிகள் நிற்காமல் சென்றுவிட்டால், ஆவேசமடைந்து மற்ற வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துகின்றன. இதனால் டிரைவர்கள் யானைகள் மறித்தால் பெரும்பாலும் லாரிகளை நிறுத்தி விடுகிறார்கள். யானைகள் ஆசை தீர கரும்புகளை தின்ற பிறகே லாாிகளை விடுவிக்கின்றன.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஆசனூர் அருகே காராப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு லாரியை எதிர்பார்த்து குட்டிகளுடன் யானைகள் ரோட்டு ஓரத்தில் உலா வந்துகொண்டு இருந்தன.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் நடுரோட்டுக்கு வந்து வாகனங்களை மறித்தன. இதனால் எந்த வாகனங்களும் செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் ரோட்டிலேயே நின்ற யானைகள், அதன்பின்னரும் கரும்பு லாரிகள் வராததால் காட்டுக்குள் சென்றன. யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்டதை உறுதி செய்த பின்னரே வாகன ஓட்டிகள் பயமின்றி அந்த இடத்தை கடந்து சென்றார்கள். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக யானைகள் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நெடுஞ்சாலையில் சுற்றுவதால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளார்கள்.
Related Tags :
Next Story