கோவிஷீல்டு தடுப்பூசி போட 1½ மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்
ஊஞ்சலூர் அருகே கோவிஷீல்டு தடுப்பூசி போட பொதுமக்கள் 1½ மணி நேரம் காத்திருந்தனா்.
ஊஞ்சலூர் அருகே உள்ள வளந்தான்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக காலை முதலே பொதுமக்கள் அங்கு சென்று காத்து கிடந்தனர். இந்த மையத்தில் கோவேக்சின் மருந்து 100 பேருக்கும், கோவிஷீல்டு 100 பேருக்கும் போடுவதற்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து முதலில் மருத்துவ குழுவினர் கோவேக்சின் ஊசி போட ஆரம்பித்தனர். ஒரு சிலர் மட்டுமே கோவேக்சின் ஊசியை போட்டு சென்றனர்.
இந்த நிலையில் 10 கோவேக்சின் மருந்து மீதம் இருந்த நிலையில் ஊசி போட வந்த சிலர் தங்களுக்கு கோவிஷீல்டு தான் போடவேண்டும் என்று அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், கோவேக்சின் ஊசி முடிந்தால் தான் கோவிஷீல்டு ஊசி போடுவோம் என கூறினார்கள். இதனால் மதியம் 12.30 மணி வரை யாருக்கும் ஊசி போடவில்லை. கோவிஷீல்டு தான் போட்டுகொள்வோம் என்று பெரும்பாலானோர் கூறியபடி அங்கு சுமார் 1½ மணி நேரமாக காத்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த டாக்டர் சண்முகம் மருத்துவ பணியாளர்களிடம் என்ன விவரம் என்று கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம், கோவிஷீல்டு ஊசியையே அனைவருக்கும் போடுங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோவிஷீல்டு ஊசி போடப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவர் மீது ஒருவர் உரசியபடி முண்டியடித்து நின்று ஊசி போட்டனர். இதேபோல் இச்சிப்பாளையம், தாமரைப்பாளையத்திலும் தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story