தாளவாடி அருகே வனப்பகுதியில் பிணமாக கிடந்த டிரைவர்


தாளவாடி அருகே வனப்பகுதியில் பிணமாக கிடந்த டிரைவர்
x
தினத்தந்தி 29 Aug 2021 1:53 AM IST (Updated: 29 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே வனப்பகுதியில் டிரைவர் ஒருவா் பிணமாக கிடந்தாா்.

தாளவாடி அருகே நெய்தாளபுரம் வனப்பகுதி சாலையோரத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றி ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த சித்தப்பா (வயது 40) என்பதும், நெய்தாளபுரத்தில் டிராக்டர் டிரைவாக வேலை பார்த்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதும், இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டு வந்ததும், அதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் நெய்தாளபுரம் வனப்பகுதி சாலையோரம் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.
மேலும் சித்தப்பாவின் உடலில் வலது காதுக்கு பின்புறம் கீழ் காயம் மற்றும் வலது கண்ணில் ரத்த காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மதுபோதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story