போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்ய முயற்சிப்பதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல்


போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்ய முயற்சிப்பதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 29 Aug 2021 10:57 AM GMT (Updated: 2021-08-29T16:27:47+05:30)

கொடுங்கையூர் போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்ய முயற்சிப்பதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

செல்போன் கோபுரம்
கொடுங்கையூர், சேலைவாயில் பகுதியை சேர்ந்தவர். மணிகண்டன் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். ரவுடியான மணிகண்டன் மீது முட்டை கோபி என்ற ரவுடியை கொலை செய்த வழக்கு உட்பட 7 வழக்குகள் உள்ளன.தற்போது குற்ற வழக்குகளில் எதுவும் சிக்காமல் திருந்தி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறி நேற்று காலை 9 மணி அளவில் கொடுங்கையூர் சின்னான்டிமடம் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

மிரட்டல்
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் மணிகண்டனை கீழே இறங்குமாறு கூறினர். அப்போது அவர், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். போலீசாரின் நீண்ட சமரசத்துக்கு பின்னர், சமாதானம் அடைந்த மணிகண்டண்டன் கீழே இறங்கி வந்தார். கொடுங்கையூர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனை வழங்கி பின்னர் அனுப்பி வைத்தனர். இதனால் சின்னான்டிமடம் பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

Next Story