பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்; மக்காச்சோள பயிர் நாசம்- சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது


பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்; மக்காச்சோள பயிர் நாசம்- சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது
x
தினத்தந்தி 29 Aug 2021 10:44 PM GMT (Updated: 29 Aug 2021 10:44 PM GMT)

பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை மக்காச்சோள பயிரை நாசப்படுத்தியது. சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை மக்காச்சோள பயிரை நாசப்படுத்தியது. சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
ஒற்றை யானை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிரை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரம் ஊருக்குள் புகுந்து வீட்டையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மலைக்கிராமத்துக்குள் புகுந்தது. முருகன் என்பவரது வீட்டு முன்பு சென்று அட்டகாசத்தில் ஈடுபட தொடங்கியது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ஆட்டோவை தனது துதிக்கையால் அமுக்கி சேதப்படுத்தியது.
மக்காச்சோள பயிர் சேதம்
சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த முருகன் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அங்கு யானை நின்று கொண்டிருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் காட்டுக்குள் செல்லவில்லை. ஆவேசம் அடைந்து பொதுமக்களை துரத்தியது. இதனால் பொதுமக்கள் பயந்து தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.
அதன்பின்னர் யானை அருகே இருந்த முருகனின் மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு அவர் 4 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தார். அந்த பயிரை யானை தின்றும், மிதித்தும் சேதப்படுத்த தொடங்கியது. நேற்று அதிகாலை 3 மணி வரை தோட்டத்திலேயே நின்று பயிரை சேதப்படுத்தியது. அதன்பின்னரே காட்டுக்குள் சென்றது. இதனால் சுமார் ½ ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர் சேதமடைந்தது.
கோரிக்கை
இதுகுறித்து பர்கூர் மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘பர்கூர் மலைப்பகுதியில் கிராமங்களுக்குள் யானைகள் வராமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைத்து கொடுக்க வேண்டும், மேலும் தொடர்ந்து இதுபோல பயிர்களையும், வாகனங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. எனவே பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உரிய இழப்பீடு உதவிகளை அரசு வழங்க வேண்டும்’ என்றனர்.

Next Story