4½ மாதங்களுக்கு பிறகு ஈரோடு மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி


4½ மாதங்களுக்கு பிறகு ஈரோடு மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி
x
தினத்தந்தி 30 Aug 2021 4:15 AM IST (Updated: 30 Aug 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை 4½ மாதங்களுக்கு பிறகு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை 4½ மாதங்களுக்கு பிறகு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடந்து வந்தது. அங்கு ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், மதுரை, தேனி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை மொத்தமாக விலை பேசி பிடித்து செல்வார்கள்.
 இதேபோல் தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்நடை துறை அதிகாரிகளும் ஈரோடு சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கி பயனாளிகளுக்கு வினியோகம் செய்தனர்.
மாட்டுச்சந்தையில் மக்கள் அதிகமாக கூடியதால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து சென்றதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மாட்டுச்சந்தை நடத்த தடை விதித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டார்.
அனுமதி
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து வருவதால், ஈரோடு மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தையை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், விவசாயிகள், வியாபாரிகள், கால்நடை டாக்டர்கள், சந்தை நிர்வாகிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும்.
சந்தைக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநில எல்லையிலேயே சுகாதாரத்துறையினர் சார்பில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாட்டுச்சந்தையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை செயல்பட 4½ மாதங்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், வருகிற 2-ந் தேதி முதல் சந்தை செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story