நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது


நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 12:06 PM GMT (Updated: 2021-08-31T17:36:35+05:30)

காஞ்சீபுரம் அடுத்த சாலவாக்கம் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவை சேர்ந்தவர் கொலக்கியம்மாள் (வயது 57). இவர் சங்கராபுரம், ரெயில்வேகேட் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர், கொலக்கியம்மாவை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி போன்றவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து கொலக்கியம்மாள் சாலவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் உள்ளாவூரை சேர்ந்த தமிழ்மணி (34) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழ்மணியை கைது செய்து அவரிடம் இருந்து தங்க நகைகளை மீட்டனர்.


Next Story