கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 75 நாட்களில் 4 டி.எம்.சி. தண்ணீர்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 75 நாட்களில் 4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டம்
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு மற்றும் பேபி கால்வாய்கள் வழியாக திறந்து விடுவது வழக்கம்.மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
75 நாட்களில் 4.600 டி.எம்.சி. தண்ணீர்
இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக பதிவானது. 2 ஆயிரத்து 521 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நேற்று காலை வரை 75 நாட்களில் பூண்டி ஏரிக்கு 4.600 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 573 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. அதேபோல் மழைநீர் வினாடிக்கு 436 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.
பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 328 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story