வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 5 Sept 2021 11:53 PM IST (Updated: 5 Sept 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கரூர், 
பஸ் டிரைவர்
கரூர் தாந்தோணி மலை பகுதிக்குட்பட்ட முத்தலாடம் பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 59). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் லோகநாதன் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லோகநாதன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு லோகநாதன் தகவல் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி உள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொதுமக்கள் அச்சம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ரோட்டில் உள்ள பிரபல ஓட்டல், பர்னிச்சர் கடை மற்றும் நரிகட்டியூர் எழில் நகரில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றனர். இந்தநிலையில் முத்தலாடம் பட்டியில் டிரைவர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரப்பகுதிகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து திருடர்களை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Next Story