ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்


ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Sep 2021 8:24 PM GMT (Updated: 6 Sep 2021 8:24 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி சந்தையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றை 2 நாட்களில் அகற்ற வேண்டும் என்று நகராட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்ற நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அமுதா, நகராட்சி அதிகாரிகள் தினசரி மார்க்கெட்டுக்கு சென்றனர். அப்போது தினசரி மார்க்கெட் முன்பு சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து தினசரி காய்கறி சந்தையின் உள்ளே ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அப்போது வியாபாரிகளுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று அதிகாரிகளிடமும், வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘ஆக்கிரமிப்பு பிரச்சினை குறித்து நகராட்சி அலுவலகத்தில் விரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும்’ என்றார். இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுதலை அதிகாரிகள் கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story