மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுமனை பட்டா
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்தோடு அருகே நல்லகவுண்டம்பாளையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு தலா 600 சதுர அடி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் மனை வழங்கப்பட்ட இடம் கரடு, முரடாக, பாறைகளாக இருந்துள்ளது. எனவே இந்த இடத்தை அளவீடு செய்து, சமன் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
முற்றுகை
இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. பிரேமலதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-
எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து, சமன் செய்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதெல்லாம் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் சில மாதங்களில் இடம் அளவீடு செய்யப்பட்டு சமன் செய்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை இடம் அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை.
தர்ணா
சுமார் 3 ஆண்டுகளாக இந்த கோரிக்கைக்காக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தான் நாங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் இங்கேயே காத்திருப்போம்.
இதுபோன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நரம்பியல் டாக்டர்கள் இல்லாததால் எங்களுக்கு சான்றிதழ் வாங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே நரம்பியல் டாக்டரை நியமிக்க வேண்டும். மேலும் எங்களுக்கான கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலைந்து சென்றனர்
அதற்கு அதிகாரிகள், ‘உங்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். ஆனால் அதை ஏற்க மறுத்த மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையாளர் ஜானி டாம் வர்கீஸ், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர், ‘உங்களுடைய கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் பேசி உடனடியாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story