லாரியை வழிமறித்து முற்றுகையிட்ட யானைகள்


லாரியை வழிமறித்து முற்றுகையிட்ட யானைகள்
x
தினத்தந்தி 6 Sep 2021 8:42 PM GMT (Updated: 6 Sep 2021 8:42 PM GMT)

ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து முற்றுகையிட்ட யானைகள் துதிக்கையால் கரும்புகளை இழுத்து ருசித்து தின்றன.

ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து முற்றுகையிட்ட யானைகள் துதிக்கையால் கரும்புகளை இழுத்து ருசித்து தின்றன.
யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக காணப்படும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டிகளுடன் சாலையில் உலா வருவதும், லாரிகளை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர் கதையாகி வருகிறது.
கரும்புகளை சுவைத்தன
அதன்படி காரப்பள்ளம் என்ற இடத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் கரும்பு லாரியை எதிர்பார்த்து குட்டிகளுடன் யானைகள் ரோட்டில் அங்கும் இங்கும் உலாவி கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை பார்த்ததும் யானைகள் வாகனத்தை நோக்கி வேகமாக ஓடின.
பின்னர் லாரியை யானைகள் சூழ்ந்து கொண்டன. இதனால் டிரைவர் என்ன செய்வதென்று அறியாமல் உடனே லாரியை நிறுத்தினார். அதைத்தொடர்ந்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை துதிக்கையால் பிடித்து இழுத்து சுவைக்க தொடங்கியது. இதை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.
செல்போன்களில்..
வாகனத்தில் இருந்தபடியே சிலர் யானைகள் கரும்பு சுவைக்கும் காட்சியை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சுமார் 30 நிமிடமாக யானைகள் நடுரோட்டில் நின்றபடி லாரியில் இருந்த கரும்புகளை சுவைத்தன. பின்னர் அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னரே  லாரி அங்கிருந்து புறப்பட்டது. தொடர்ந்து மற்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.
இதனால் தமிழக-கர்நாடக மாநிலம் இடையே சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியை முற்றுகையிட்டு யானைகள் கரும்புகளை ருசித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story