கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்: அரங்கமங்கலம் ஊராட்சியை வடலூர் நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு குடிநீர், சொத்து வரிகளை உயர்த்தக்கூடாது என்றும் வலியுறுத்தல்
கடலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அரங்கமங்கலம் ஊராட்சியை வடலூர் நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் குடிநீர், சொத்து வரிகளை உயர்த்தக்கூடாது என்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
கடலூர்,
தரம் உயர்வு
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 22 ஊராட்சிகள் கடலூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், திட்டக்குடி மற்றும் வடலூர் பேரூராட்சிகளை (குறிஞ்சிப்பாடி ஊராட்சியில் உள்ள 3 ஊராட்சிகளுடன்) தனித்தனி நகராட்சிகளாக தரம் உயர்த்தியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கடலூரை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடியை நகராட்சியாகவும் தரம் உயர்த்திட சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை இணைத்தல் தொடர்பான முதல் கருத்து கேட்பு கூட்டம் நேற்று கடலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உத்தேச பட்டியல்
கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசுகையில், கடலூர் பெருநகராட்சி மாநகராட்சியாகவும், வடலூர், திட்டக்குடி பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதாவது கடலூர் மாநகராட்சியில் கடலூர் நகராட்சி முழுவதும் மற்றும் சேடப்பாளையம், செம்மங்குப்பம், அன்னவல்லி, குடிகாடு, காரைக்காடு, பச்சையாங்குப்பம், கரையேறவிட்டகுப்பம், அரிசிபெரியாங்குப்பம், கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நத்தப்பட்டு, பாதிரிக்குப்பம், கோண்டூர், கடலூர் முதுநகர், பில்லாலி, குண்டுஉப்பலவாடி, திருவந்திபுரம், வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, தோட்டப்பட்டு, காராமணிக்குப்பம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. இது இறுதி பட்டியல் கிடையாது. உத்தேச பட்டியல் தான்.
அதனால் அதில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம். கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும். பல்வேறு நிறுவனங்கள் கடலூரில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால் இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.
வரி விதிப்பு
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன் பேசுகையில், கடலூர் நகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடியை நகராட்சியாக தரம் உயர்த்தியதை வரவேற்கிறோம். கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக இணைய உள்ள ஊராட்சிகளின் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களின் பதவி காலத்தை முழுமையாக முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, ஊராட்சி பகுதியில் அதிகளவு வரி விதிக்கப்படும் என மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் புதைவட மின் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வார்டுகள்
அ.தி.மு.க. நிர்வாகி சேவல்குமார் கூறுகையில், கடலூர் நகராட்சியில் தற்போது 45 வார்டுகள் உள்ளன. அதனை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் போது மொத்தம் எத்தனை வார்டுகள் வரும்?, எவ்வளவு மக்கள் தொகை இருப்பார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் 3 மாதமாக செயல்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரங்கமங்கலம் ஊராட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் கூறுகையில், வடலூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியதை வரவேற்கிறோம். ஆனால் புயல், மழை காலங்களில் அதிகளவில் பாதிக்கப்படும் அரங்கமங்கலத்தை, வடலூர் நகராட்சியுடன் எக்காரணத்தை கொண்டும் இணைக்க கூடாது. அரங்கமங்கலத்தை நகராட்சியுடன் இணைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் அடையப் போவதில்லை. மாறாக ஏழை, எளிய மக்கள் தான் உயர்த்தப்படும் வரி விதிப்பால் பாதிக்கப்படுவார்கள். அதனால் அரங்கமங்கலத்தை வடலூர் நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார். அதற்கு கலெக்டர், இதுதொடர்பாக அரங்கமங்கலம் பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்குமாறு கூறினார்.
குடிநீர் வரி
அப்போது பெரும்பாலான அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் கடலூரை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடியை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தினாலும் குடிநீர், சொத்து, பாதாள சாக்கடை வரி போன்றவற்றை உயர்த்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எழுத்து மூலமாகவோ அல்லது அடுத்து நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திலோ தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story