கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சலூன் கடைகளை அடைத்து போராட்டம்


கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சலூன் கடைகளை அடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 2:05 AM IST (Updated: 8 Sept 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து ஈரோட்டில் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து ஈரோட்டில் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
கட்டுப்பாடு
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பாரம்பரிய முடிதிருத்தும் தொழிலில் மருத்துவர் சமூகத்தினரை சேர்ந்த 30 லட்சம் பேர் ஈடுபட்டு வருகிறோம். இந்த தொழிலையே நாங்கள் நம்பி உள்ளோம். மாற்று சமூகத்தினர், பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனத்தினர் இந்த தொழிலில் பல்வேறு யுக்தி, சலுகைகளை அறிவித்து பாரம்பரிய முடிதிருத்தும் தொழிலை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் வருமானமின்றி தவித்து வருகிறோம். பெரும் சிரமத்தில் இருக்கும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாட்டால் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story