சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Sep 2021 9:05 PM GMT (Updated: 7 Sep 2021 9:05 PM GMT)

மொடக்குறிச்சி குலவிளக்கு கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கு கிராம மக்கள், குரங்கன் ஓடை பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க தலைவர் நடராஜ், செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகளுடன் வந்து, ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமதலாவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளை நிலம் கொண்ட பூமி ஆகும். இங்கு சிலர், விளை நிலத்தில் மின் இணைப்பு பெற்று, சாயப்பட்டறை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளனர். அதே நபர் கதிரம்பட்டி பகுதியில் சாயப்பட்டறை அமைத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதால், அந்த கிராமத்தினர் புகார் செய்தனர்.
அதன்பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த பட்டறையின் மின் இணைப்பை துண்டித்து, பட்டறைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறையை குத்தகைக்கு எடுத்து இயக்கி வரும் அந்த நபர்கள், குலவிளக்கில் விளை நிலத்தில் சாயப்பட்டறை அமைக்க முயற்சி எடுத்து வருகிறார்கள்.
இங்கு சாயப்பட்டறை அமைக்கப்பட்டால், விளை நிலங்கள், நிலத்தடி நீராதாரம் பாதிக்கும். அருகே உள்ள குரங்கன் ஓடையில் சாயக்கழிவை வெளியேற்றவும் வாய்ப்பு ஏற்படும். எனவே எங்கள் கிராமத்தில் விவசாய விளை நிலத்தில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Next Story