அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
பேனர்கள் வைப்பவர்கள் மீது...
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகர்புற மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் அனுமதியில்லாமல் பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளில் பிரதான சாலைகள், இணைப்பு சாலைகள், சாலை சந்திப்புகள், சாலையின் மையப்பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்கள், தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் இடங்கள் மீதும் விளம்பர பலகைகள், பேனர்கள் போன்றவை அமைப்பதற்கு முன் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.
கடும் நடவடிக்கை
பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு விளம்பர கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பரங்கள் முறைகேடான விளம்பரங்கள் ஆகும். அரசு அலுவலர்களின் கண்காணிப்பின்றி அமைக்கப்படும் முறைகேடான விளம்பர கட்டமைப்புகளால், வாகன டிரைவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படவும் வழி வகுக்கின்றன. எனவே முறையான அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்கள் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அனுமதியின்றி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத விளம்பர பலகைகள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story