ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை


ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 Sep 2021 10:22 AM GMT (Updated: 9 Sep 2021 10:22 AM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ரெயில் பயணிகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்திலும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் வகையில் மாநில எல்லை பகுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது. அங்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வருபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதேபோல் ரெயில் மூலமாக தினமும் ஏராளமானவர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து செல்கிறார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் சுகாதார பணியாளர்கள் முகாமிட்டு உள்ளனர். ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு நுழைவு வாயில் பகுதியில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அறிகுறி தென்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனை
இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. அங்கிருந்து ஈரோட்டுக்கு தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக சுகாதார பணியாளர்கள் கவச உடை அணிந்து தயாராக இருந்தனர்.
ஈரோட்டுக்கு ரெயில்களில் வந்து இறங்கிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைக்கு தேவையான சளி மாதிரி எடுக்கப்பட்டது. மேலும், பயணிகள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், அவர்களது பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சுகாதார பணியாளர்கள் சேகரித்தனர். மேலும், பயணிகள் செல்லும் பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story