சத்தி அருகே நூதன முறையில் பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்; மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


சத்தி அருகே நூதன முறையில் பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்; மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Sept 2021 4:57 PM IST (Updated: 9 Sept 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலீஷ் போட்டு தருவதாக கூறி...
சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டாமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர் நேற்று முன்தினம் பகலில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டு முன்பு ஒரு மோட்டார்சைக்கிள் வந்து நின்றது.
அதிலிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் இறங்கினர். திடீரென அவர்கள் பழனியம்மாள் வீட்டு்க்குள் நுழைந்தனர். அங்கிருந்த பழனியம்மாளிடம், ‘நாங்கள் தங்க நகை, பித்தளை பாத்திரங்களுக்கு பாலீஷ் போடுவோம். எனவே உங்களிடம் தங்க நகை, பித்தளை பாத்திரங்கள் இருந்தால் கொடுங்கள். பாலீஷ் போட்டு தருகிறோம்’ என்று கூறினார்கள்.
நகையை கழற்றி வைத்தார்
உடனே பழனியம்மாள் வீட்டுக்குள் சென்று, குத்து விளக்கு ஒன்றை எடுத்து கொண்டு வந்தார். பின்னர் அவர்களிடம் அதை கொடுத்து இதை பாலீஷ் போட்டு் கொடுங்கள் என்றார். அதை வாங்கிய அவர்கள் குத்துவிளக்குக்கு பாலீஷ் போட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பழனியம்மாள் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருந்தது. இதனால் அவர் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கையில் வைத்துக்கொண்டார். அப்போது வாலிபர்கள் 2 பேரும் அவரிடம், குக்கர் இருக்கிறதா? என்று கேட்டனர்.
அபேஸ்
இதனால் பழனியம்மாள் தங்க சங்கிலியை சுவர் திண்டின் மீது வைத்துவிட்டு உள்ளே சென்று, குக்கரை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தார். அப்போது 2 வாலிபர்களையும் காணவில்லை. சுவர் திண்டின் மீது வைத்திருந்த அவரது தங்கசங்கிலியும் இல்லை. வாலிபர்கள் 2 பேரும் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
1 More update

Next Story