பவானிசாகர் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


பவானிசாகர் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sept 2021 5:08 PM IST (Updated: 9 Sept 2021 5:08 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு
பவானிசாகர் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 2019-2020, 2020-2021 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், மேலும், டெங்கு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வு
அதைத்தொடர்ந்து, பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பவானிசாகர் மண்டலத்தில் மீன் வளத்துறையில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பவானிசாகர் பழைய மீன் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்வள பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். மேலும், மீன்குஞ்சு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதாகெண்டை சினை மீன்களை கொண்டு மீன் குஞ்சுகள் பொறிப்பகத்தில் நுண் மீன்குஞ்சுகள் உற்பத்திமுறை குறித்து கேட்டறிந்தார்.
பழைய மீன் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதாகெண்டை வகையில் இளமீன்குஞ்சுகள், விரலிகள், முதிர்ந்த விரலிகளின் மாதிரிகளை காண்பித்து ஒவ்வொரு அளவிலான மீன்குஞ்சுகளின் வளர்ப்பு நாட்கள் குறித்தும், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன் வளர்ப்போர்க்கும், மீன் வளர்ப்பு மையங்களுக்கும் குளம், ஏரி முதலான நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்துவரும் குத்தகைதாரர்களுக்கு வினியோகம் செய்வது குறித்தும் மீன்குஞ்சுகளின் விலை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
சினை மீன் தொட்டி
இதைத்தொடர்ந்து, பழைய மீன் பண்ணையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி 2020-21 திட்டத்தின் கீழ் தமிழக மீன்பிடிதுறை முகதிட்ட உபகோட்டத்தின் வாயிலாக ரூ.3 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சினைமீன் தொட்டிகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, மீன்வளத்துறை உதவி இயக்குனர் தில்லைராஜன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, பாவேசு, பவானிசாகர் செயல் அலுவலர் ரமேஷ் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story