ஈரோடு மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்


ஈரோடு மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்
x

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
300 மாடுகள்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4½ மாதங்களுக்கும் மேலாக மாட்டுச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவுவது குறைந்து வருவதால் மாட்டுச்சந்தை நடத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரம் மாட்டுச்சந்தை கூடியது. அப்போது சுமார் 150 மாடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 2-வது வாரமாக நேற்றும் மாட்டுச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் அதிக மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை கொண்டு வந்திருந்தார்கள். இதில் 200 பசு மாடுகள் உள்பட மொத்தம் 300 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
வெளிமாநில வியாபாரிகள்
சந்தையில் வியாபாரிகள் குறைவாக வந்திருந்தார்கள். இதனால் மாடுகளின் விற்பனையும் மந்தமாக காணப்பட்டது. இதுகுறித்து சந்தை பொறுப்பாளர் ராஜேந்திரன் கூறும்போது, “ஈரோடு மாட்டுச்சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மராட்டியம் போன்ற வெளிமாநில வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். தற்போது கொரோனா தொற்று காரணமாக மாநில எல்லைகளின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தார்கள்”, என்றார்.
மாட்டுச்சந்தையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் சந்தையில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

Next Story