ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 9 Sept 2021 10:20 PM IST (Updated: 9 Sept 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் மீனாட்சி சுந்தரனார் சாலை, ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. 2 அடிக்கும் குறைவான உயரமுள்ள சிலைகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக உயரம் குறைவான சிலைகள் மட்டுமே விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும், கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகளும் இருந்தன. இந்த சிலைகள் ரூ.100 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டன.
பூஜை பொருட்கள்
இதேபோல் விநாயகர் சிலையின் மீது வைக்கப்படும் அழகிய குடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த குடைகள் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகள், குடைகளை வாங்கி சென்றார்கள்.
பூஜை பொருட்களான பழங்கள், அருகம்புல், பூக்களின் விற்பனையும் மும்முரமாக நடந்தது. விழாவையொட்டி பழங்கள், பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது.

Next Story